சுயமரியாதைத் திருமணம்

சுயமரியாதைத் திருமணம்

About Periyar Matrimony

சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவுக்கு ஒவ்வாத மதம் சார்ந்த மூடச் சடங்குகளைத் தவிர்த்து, புரோகிதத்தை மறுத்து, அறிவியல் பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, சிக்கனமாக செய்யப்படும் திருமணம் ஆகும். 'வாழ்க்கையில் பிரவேசிக்க வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் ஒப்பந்தம்' என்று எளிமையாக இதற்கு விளக்கம் சொன்னார் தந்தை பெரியார்.

மதம் சார்ந்த, குறிப்பாக இந்துமதத் திருமண முறைகள் பெண்களை அடிமையாக்கும் சடங்குகளையும், புரியாத வடமொழியில் இழிவுபடுத்தும் மந்திரங்களையும் கொண்டதாகவும், தேவையற்ற பொருளாதார வீணடிப்பைச் செய்வதாகவும் உள்ளன. எனவே சிக்கனமாக எளிமையாக நம் தாய்மொழியில் உறுதிமொழி கூறி செய்துகொள்ளும் முறையே இந்தத் திருமணம்.

சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன?

சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவுக்கு ஒவ்வாத மதம் சார்ந்த மூடச் சடங்குகளைத் தவிர்த்து, புரோகிதத்தை மறுத்து, அறிவியல் பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, சிக்கனமாக செய்யப்படும் திருமணம் ஆகும். 'வாழ்க்கையில் பிரவேசிக்க வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் ஒப்பந்தம்' என்று எளிமையாக இதற்கு விளக்கம் சொன்னார் தந்தை பெரியார்.
சுயமரியாதைத் திருமணம் - ஏன்?
மதம் சார்ந்த, குறிப்பாக இந்துமதத் திருமண முறைகள் பெண்களை அடிமையாக்கும் சடங்குகளையும், புரியாத வடமொழியில் இழிவுபடுத்தும் மந்திரங்களையும் கொண்டதாகவும், தேவையற்ற பொருளாதார வீணடிப்பைச் செய்வதாகவும் உள்ளன. எனவே சிக்கனமாக எளிமையாக நம் தாய்மொழியில் உறுதிமொழி கூறி செய்துகொள்ளும் முறையே இந்தத் திருமணம்.
இம்முறையில் இதுவரை எவ்வளவு திருமணங்கள் நடந்திருக்கும்?
சுயமரியாதைத் திருமணங்கள் 1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை லட்சக்கணக்கான திருமணங்கள் இந்த முறையில் நடைபெற்றுள்ளன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகின்றன.
 சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வது எப்படி?
சட்டப்படியான திருமண வயதை நிறைவு செய்த மணமக்கள் இருவர், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் அல்லது மற்றோர் முன்னிலையில் உறுதிமொழியேற்றோ அல்லது மாலை மாற்றிக்கொண்டோ அல்லது மோதிரம் மாற்றிக் கொண்டோ தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தாலே சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றதாகப் பொருள். விரும்புவோர் தாலியும் அணிந்துகொள்ளலாம். இதுவே சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளும் முறையாகும். இன்னார் தான் செய்ய வேண்டும், இன்ன முறைப்படி தான் செய்ய வேண்டும், இன்ன சடங்குகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இதில் இல்லை. காலந்தோறும் தேவையான மாறுதல்களை இத்திருமண முறையிலும் ஏற்பட்டுள்ளன. வாழ்க்கை இணை ஏற்பு விழா உறுதிமொழி
 இது சட்டப்படி செல்லுமா?
1968 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து திருமண(தமிழ்நாடு திருத்த)ச் சட்டம் பிரிவு 7(a)-ன் படி இத் திருமணங்கள் செல்லும்.
 தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த முறை செல்லுமா?
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் சுயமரியாதைத் திருமணங்கள், இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் சட்டப்பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளில் சட்டபூர்வமாக இத் திருமணத்தைச் செய்ய இயலும்.
 தமிழர் அல்லாதவர்களிடம் இதே போன்ற முறை எதுவும் உள்ளதா?
சுயமரியாதைத் திருமணங்கள் ஒரு மொழியினருக்கோ, இனத்தினருக்கோ மட்டும் சொந்தமானதல்ல. மதம் சார்பற்று நடக்கும் அனைத்து பதிவுத் திருமணங்களும் சுயமரியாதைத் திருமணங்களே! தங்களுக்குப் புரிந்த மொழியில் மணமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
 சுயமரியாதைத் திருமணங்களை, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா?
ஆம். தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படியும், நீதிமன்றங்களின் ஆணைப் படியும் அனைத்து திருமணங்களையும் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். சுயமரியாதைத் திருமணம் செய்த அன்றே கூட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 90 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்திடல் வேண்டும். திருமணத்தை, திருமணம் நடைபெற்ற இடத்திலுள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப் பதிவினை மேற்கொள்ளலாம்.
 மத மறுப்புத் திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் மத மறுப்புத் திருமணம் செய்வோர் 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் படி, சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, 30 நாள்கள் அறிவிக்கை நாள்களுக்குப் பிறகு திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தெளிவுபெற 9176757083 /84 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம். 'சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்' என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகத்தில் இன்னும் விரிவான செய்திகளை அறியலாம்.